அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், அம்பாளை வழிபட்டு ‘மங்கல கௌரி விரதம்’ கடைப்பிடித்து வந்தால், நற்பலன்களைப் பெறலாம்.
ஆடிச்செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களைப் பெற்றுத்தரும்.
பெண்கள் அனைவரும் ஆடி செவ்வாய்க்கிழமைகளில், எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி நீராடி விரதம் மேற்கொண்டு அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும்.
ராகுவின் ஆதிதேவதையாக காளிதேவி இருக்கிறாள். எனவே செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவற்றால் திருமணத் தடை ஏற்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு கால பூஜையில் கலந்துகொள்ளலாம்.
ஆடிச்செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை மட்டுமின்றி, முருகப்பெருமானையும் வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருந்து தீபம் ஏற்றி, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
ஆடி மாத செவ்வாய் அன்று ஔவையார் விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஔவையாரை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். பச்சை அரிசி மாவில், சக்கரை சேர்த்து கொழுக்கட்டை தயாரித்து, அதை ஔவையாருக்கு நைவேத்தியமாக படைப்பார்கள். இரவு நேரத்தில் தான் ஔவையார் விரதம் இருப்பார்கள். இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருக்கும் போது, நைவேத்தியமாக படைக்கப்பட்ட கொழுக்கட்டையை உண்பார்கள். இந்த விரதத்தை மூத்த சுமங்கலி பெண்களின் வழிகாட்டுதல்படி, இளம் பெண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். இதில் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் ஔவையாருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.